மோடிக்கு ஆரம்பமே சிக்கல்.. இந்தியா கூட்டணியின் மாஸ்டர் பிளான்
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் ஆதரவுடன் மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி பதவியேற்றுள்ளது. அந்த வகையில் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றார்.
இந்நிலையில் மத்தியில் ஆட்சியை பிடிக்க ஆதரவளித்த கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்களிக்கும் வகையில் பாஜக அமைச்சர் பதவிகளையும் வழங்கியுள்ளது. அதேநேரத்தில் ஒரே பதவிக்கு பல கட்சிகள் போட்டி போடும் சூழலும் உருவாகியுள்ளது. அந்த வகையில் பலவிதமான பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்துள்ளது.
இந்த நேரத்தில் மக்களவை சபாநாயகர் பதவி யாருக்கு என்பதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.வரவுள்ள ஜூன் 26 ஆம் தேதி சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி ஆட்சி அமையும் போது சபாநாயகர் பதவியானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மைனாரிட்டி அரசு ஆட்சியில் இருக்கும் போது நம்பிக்கையில்லா தீர்மானம், குதிரை பேரம், எம்பிக்கள் தகுதிநீக்கம் உள்ளிட்டவை நடைபெற வாய்ப்பிருப்பதால் சபாநாயகர் பதவி முக்கியமானதாகும்.
பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் சபாநாயகர் பதவியை பெற தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றனர்.ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த சபாநாயகர் பதவியை தங்கள் வசமே வைத்துக்கொள்ள முயற்சித்து வருகிறது. அந்த வகையில் ஆந்திர மாநில பாஜக தலைவரும், ராஜமுந்திரி எம்.பி.யுமான டக்குபதி புரந்தேஸ்வரி 18வது மக்களவையில் சபாநாயகர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளார் என்று கூறப்படுகிறது.
அதேநேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி தங்களுக்கு துணை சபாநாயகர் பதவியை ஒதுக்கவில்லை என்றால் சபாநாயகர் பதவிக்கு காய் நகர்த்தும் என்றும் கூறப்படுகிறது. இந்திய கூட்டணியானது 233 இடங்களை வைத்துள்ள நிலையில் சபாநாயகர் பதவிக்கு போட்டியிட்டால் பாஜக அணியில் உள்ள சில கட்சிகள் மாறி வாக்களிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில் மைனாரிட்டி அரசாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடிக்கு ஆரம்பமே சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.